×

40 வயதைக் கடந்த பெண்கள் 2 வருடத்திற்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

சென்னை: 40 வயதைக் கடந்த பெண்கள் 2 வருடத்திற்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நன்கு கவனித்து குணமடைய செய்த அனைத்து மருத்துவர்களையும் பயிற்சியாளர்களையும், குழந்தைகளின் பெற்றோர்களையும் பாராட்டினார். மேலும் அக்குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து உரையாடி அங்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் சென்னை ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்ட ரூ. 58 லட்சம் மதிப்பிலான மாமோகிராம் கருவி, எம்.ஆர்.எப். நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட, ரூ. 45 லட்சம் மதிப்பிலான கண் புரை நீக்கும் இயந்திரம், ரூ. 57 லட்சம் மதிப்பிலான அறுவை சிகிச்சை உபகரணங்களை சுத்தம் செய்யும் பிலாஸ்மா ஸ்டெர்லைசர், நுண்ணுயிர்க்கொல்லி இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் போன்ற ரூ. 2.25 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்,பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்று நோயும் ஒன்று. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கைப்படி, உலக அளவில் இந்தியாவில் மட்டும் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதன் மூலம் இதை முற்றிலுமாகக் குணப்படுத்தமுடியும். எந்த அறிகுறிகளும் இல்லாத போதே கண்டறிய உதவும் ஒரு மேம்பட்ட நுட்பமான முறைதான் இந்த ஊடு கதிர்ப்பட சோதனை (மாமோகிராம்). 40 வயதைக் கடந்த பெண்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் குடும்பத்தில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருந்தால் 35 வயதிலிருந்து, ஆண்டுக்கு ஒருமுறையும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு சிறந்த இடமாக ஸ்டான்லி மருத்துவமனை விளங்குவதால் இதை பொதுமக்கள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் இளைய அருணா ,மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர் , ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி ,ரோட்டரி மாவட்ட ஆளுநர் நந்தகுமார் உடன் இருந்தனர்.

The post 40 வயதைக் கடந்த பெண்கள் 2 வருடத்திற்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Chennai ,Ma. Subramanyan ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...